தயிர் வடை

8 comments
தேவையான பொருட்கள் :-
வடை செய்ய :-
  • உளுந்து - 100 கிராம்
  • மிளகு - அரை ஸ்பூன்
  • உப்பு - சிறிது
  • தயிர் - 300 மில்லி
மிக்ஸர் செய்ய :-
  • கடலை மாவு - 100கிராம்
  • அரிசி மாவு - 3 ஸ்பூன்
  • பெருங்காய பொடி - சிறிது
  • உப்பு - சிறிது
  • கடலை பருப்பு - 50 கிராம்
  • கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  • மல்லி தழை - சிறிது
  • மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை :-
  • கடலை பருப்பை கழுவி விட்டு நீரில் அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.
  • கடலை மாவு, அரிசிமாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் விட்டு கட்டியாக முறுக்கு மாவு பதத்தில் முதலில் பிசைய வேண்டும்.
  • அதை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெய்யில் பிழிய வேண்டும்.
  • பாதி மாவு பிழிந்த உடன் மீதி மாவில் மேலும் சிறிது நீர் சேர்த்து தளர கரைத்து சூடான எண்ணெய்யில் பூந்தி கரண்டியை வைத்து மாவை தேய்த்து கார பூந்தியாக எடுக்க வேண்டும்.
  • அதே சூடான எண்ணெய்யில் ஊறிய கடலை பருப்பை போட்டு கோல்டன் கலர் வந்தஉடன் எடுத்து ஓமப்பொடி, காரபூந்தியில் போட்டு கருவேப்பிலையையும் எண்ணெய்யில் போட்டு முறுகலாக எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
  • இறுதியில் அனைத்தையும் ஒரு சேர கைகளால் பிசைந்து நொறுக்கினால் மிக்சர் தயார்.
  • வடை செய்ய ஊறிய உளுந்தை நைஸாக அரைத்து அதனுடன் உப்பையும், தூளாக்கிய மிளகையும் சேர்த்து பிசைந்து வடைகளாக எண்ணெய்யில் சுட்டு எடுக்க வேண்டும்.
  • பரிமாறும் பொழுது தட்டில் இரண்டு வடைகளை வைத்து அதன் மேல் 4 கரண்டி தயிரை ஊற்றி மிக்சரை அதன் மேல் வைத்து மிளகாய் பொடி தூவி சிறிது மில்லி இலைகளை பொடியாக நறுக்கி மேலே வைத்து பரிமாற வேண்டும்.
  • தயிர் வடை தயார்.
Read More...

அவல் கொழுக்கட்டை

17 comments
கொழுக்கட்டை பிள்ளையாருக்கு ரொம்ப பிடித்தமான நைவேத்யம். அதை பல விதத்துல செய்து பல பெயரும் வைப்பாங்க. சின்ன வயசுல கொழுக்கட்டையை பத்தி ஒரு பாட்டு நாம எல்லாம் கேள்வி பட்டிருப்போம்.
சின்ன பிள்ளைங்க இந்த பாட்டை பாடிக்கிட்டே விளையாடுவாங்க.. அந்த பாட்டு..
மா கொழுக்கட்டை
மஞ்ச கொழுக்கட்டை
மாமியார் தந்தார்
பிடி கொழுக்கட்டை
அத்தை தந்தார்
அவல் கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்திக்கு பண்ணிய கொழுக்கட்டையை போட்டோ எடுத்து வைத்தாச்சு. ஆனா எழுத தட்டினது அரை குறையா முடிக்க முடியாம தள்ளி போய்கிட்டே இருந்தது. இன்னிக்கு முழுசும் முடித்து கொழுக்கட்டை பதிவை தேத்தியாச்சு..:)
தேவையான பொருட்கள் :-
  • அவல்                     - கால் கிலோ
  • பிட்டரிசி மாவு     - 100 கிராம் 
  • நெய்                       - 1 ஸ்பூன் 
  • வெல்லம்               - 200 கிராம் 
  • தேங்காய் துருவல் - சிறிது 
செய்முறை :-
  • அவலை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக கழுவி வடிகட்டி 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல்,பிட்டரிசி மாவு , நெய்,தேங்காய் துருவல் அனைத்தையும் போட்டு ரெடியாக வைக்க வேண்டும்.
  • வெல்லத்தை முழ்கும் அளவு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை பாகு வைத்து வடிகட்டி மீண்டும் காய்ச்சி இறக்க வேண்டும்.
  • வெல்ல கரைசலை பாத்திரத்தில் உள்ள அவல் கலவையில் ஊற்றி கரண்டி வைத்து கிளற வேண்டும்.
  • கட்டியாக கிளறிய அவல் கலவையை கொலுகட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • அவல் கொழுக்கட்டை தயார்.
Read More...

தலைமுறை பேசும் பொக்கிஷம்

22 comments


தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார்.


என்னிடம் பொக்கிஷமாக பாதுகாக்க படும் பொருட்களில் இப்பொழுதும் உபயோகத்தில் இருப்பது இந்த சிணுக்கோலி.. செவ்வாய், வெள்ளிகளில் தலை குளித்து சிக்கு எடுப்பது இன்றும் இந்த சிணுக்கோலியால்தான். இதன் வயது 150க்கு மேல் இருக்கும். நான் 7 வயது சிறுமியாக இருந்த போது எனது தாத்தாவின் அம்மா இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் வயது 100 ஐ நெருங்கும் சமயம். அந்த பாட்டி இறந்தது எனக்கு லேசாக நினைவில் இருக்கின்றது. அந்த பாட்டி பயன்படுத்திய இந்த வெள்ளி சிணுக்கோலி 3 தலைமுறை கடந்து இப்பொழுது என்னிடம் உள்ளது.


சங்கு இதுவும் பாட்டி பயன்படுத்தியதுதான்.அன்று பாட்டி பூஜையில் வைத்து வணங்கிய சங்கு இன்று பாட்டியின் நினைவாக என் வீட்டு பூஜை அறையில் உள்ளது.


சின்ன டப்பா...இது என் அம்மாவின் அப்பா உபயோக படுத்தியது. இந்த டப்பா தாத்தாவின் ஞாபகமாக சும்மா வைத்துள்ளேன் . காரணம் இந்த டப்பா இந்திய சுதந்திரத்துக்கு முன் வெள்ளையன் ஆட்சியில் விற்பனைக்கு வந்த ஷேவிங் க்ரீம் டப்பா.. அந்த காலத்தில் க்ரீம்மாக இல்லாமல் கட்டி சோப்பாக வந்ததாம்.
இந்த தாத்தாவை பற்றி அக்கறை பச்சை பதிவில் எழுதியுள்ளேன்.


அழகிய கும்பா..இது அம்மாவின் அம்மா  வழி வந்தது. அந்த பாட்டி இந்த கும்பாவை அம்மாவிற்கு கொடுக்க அம்மா அதை அழகுக்காக எதற்கும் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருந்தார்கள். இப்பொழுது நான் இதை ஷோகேஷில் அழகுக்காக வைத்துள்ளேன்.


போட்டோ.. சமீபத்தில் தான் என் மகன் இந்த போட்டோவை இரு தலைமுறைகள் உள்ள போட்டோ இது, எனக்கு வேண்டும் என்று அம்மா வீட்டில் இருந்து எடுத்து வந்தது. எனது அம்மா ,அப்பாவின் கல்யாண போட்டோ.


திருக்கை.. திருகைன்னும் சொல்லுவாங்க. வரும்  தலைமுறையினருக்கு இதன் பயன் பாடே தெரியாமல் போகலாம். பல வருடங்களாக பயன் படுத்தாமல் இருந்த இதை அம்மாவிடம் இருந்து நான் வாங்கி பயன் படுத்தாமல் பழைய பொருட்களின் நினைவு சின்னமாக வைத்துள்ளேன்.
Read More...

கதை கேளு... கதை கேளு...

10 comments
ஒரு ஞானி தன் சீடருடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய போயிருந்தார். அவ ஊர் மக்கள் ஞானியை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள் . அவ் ஊரை விட்டு  வேறு ஊருக்கு செல்லும் போது ஞானி இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.மறுநாள் வேறு ஊருக்கு சீடருடன் சென்றார். அங்கு மக்கள் அவரை மதிக்கவில்லை. அவரின் உபதேசத்தை கேட்கவில்லை. அவ் ஊரை விட்டு சென்ற ஞானி இறைவனிடம் இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார்.  சீடர் ஒன்றும் புரியாமல் நம்மை மதித்து மரியாதை செய்த மக்களை பிரிய சொல்கிறீர்கள், நாகரீகம் தெரியாத இம் மக்களை அவர்கள்  பிரியாமல் இவ் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று தாங்கள் கூறும் காரணம்  எனக்கு விளங்க வில்லை என்று சீடர் கேட்டார். அதற்கு ஞானி நல்ல மனிதர்கள் நான்கு திசைகளில் பிரிந்து போனால் அவர்களிடம் பழகும்  தீய மனிதர்கள் நல்லவர்களாக மாறுவதற்கு வழி கிடைக்கும், ஆனால் ஒரே ஊரில் உள்ள தீய மனிதர்கள்  பிரிந்து போகாமல்  ஒரே இடத்தில் இருந்தால் அவர்களிடம் உள்ள தீய குணங்கள் மற்றவர்களிடம் பரவாமல் இருக்கும் . அதனால்தான் இவ்வாறு கூறினேன என்றார்.
                                                             இந்த கதையை படித்து விட்டு என் மகன் சின்னவர் என்னிடம் கேட்ட கேள்வி அம்மா...பூவோட சேர்ந்த நாறும் மணம் பெறும்.. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.. அதெப்பிடி இந்த கதையால இந்த பழமொழியோட லாஜிக் எங்கியோ உதைக்குதே..? ஏன் அந்த ஊரில் இருந்து பிரிந்து செல்லும் நல்லவர்கள்  கெட்டவர்களுடன் சேர்ந்து  கெட்டவர்களாக மாறிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? என்ற கேள்வியை என் முன் வைத்தார். எனக்கு பதில் தெரியல்லை... படிக்கிற நீங்க என்ன சொல்றீங்க...?
Read More...

வரைவு கோலம்

21 comments
பொங்கலன்று போட்ட வரைவு கோலம்.எல்லார் வீட்டு வாசல்லயும் பொங்கலுக்கு பொங்கல் பானை ,கரும்பு போடுவார்கள். அன்று தெருவில்  வரைவு கோல போட்டின்னு சொன்னதுனால நான் இந்த நடன பெண்   போட்டேன்.. 9மணிக்கு ஜட்ஜ்ஜஸ் வர்றதுக்குள்ள கோலம் மழை பெய்து அழிஞ்சு போச்..


Read More...

அடையும் கார சட்னியும்

12 comments
மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை
வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
மணலும் மணல் சார்ந்த நிலமும் - பாலை
என்ன.. அடையும் கார சட்னியும்னு தலைப்பை போட்டு தமிழ் பாடம் நடத்துறாங்க அப்பிடின்னு நினைக்காதீங்க... ஏன்னா.. இப்ப ஆறாவதா ஒரு நிலம் உருவாயிருக்கு. அது
இருளும் இருள் சார்ந்த நிலம் - தமிழ்நாடு
அட ஆமாங்க நம் தமிழ்நாட்டின் நிலை அப்பிடி ஆகிபோச்சு.. இந்த கரண்ட்டை நம்பி எந்த வேலையும் செய்ய முடியல்லை.. பாருங்க அடைதோசைக்காக பருப்பு ஊற வைத்தேன். கடந்த சில மாசமா காலையில் 6 மணிக்கு போற கரண்ட் 10 மணிக்குதான் வரும். அதனால பசங்கள ஸ்கூல்,கல்லூரிக்கு ரெடியாக்கும் அம்மாக்கள் எல்லாம் 5 மணிக்கே எழுந்து ஆட்டுற, அரைக்கிற வேலையை முதல்ல செய்துடுவாங்க.. நான் அடைதோசைக்கு ஊற வைத்த அன்று 5.30க்கே கரண்ட் போயிடுத்து.. இனி 10மணிக்குதான் வரும், ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டி எடுத்திரலாம்னு மூலையில கிடந்த கல்லை நல்லா கழுவி அதுல ஆட்டி எடுத்து திரும்பவும் கழுவி மறுபடியும் காரசட்னிக்கு அரைத்து அடுத்து அம்மியில லன்ச் ப்ரிபரேசனுக்கு தேவையானதை அரைத்து உஸ் அப்பாடான்னு... ஆகிபோச்சு போங்க..:( ஆனா ஒரு சந்தோஷம் மிக்சி, கிரைண்டர்ல அரைத்து சாப்பிடுர டேஸ்ட்டை விட அம்மி, ஆட்டுக்கல்லுல அரைச்சி சாப்பிட்டா அந்த டேஸ்டே தனிதான். என்ன பண்ணறது.... இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரைன்னு சொல்றா மாதிரி நாமளும் மாறிட வேண்டியதுதான்..:) சரி அடைதோசை சாப்பிடலாம் வாங்க.

அடைதோசை:-

தேவையான பொருட்கள்
  • பச்சரிசி - ரெண்டு கைப்பிடி
  • துவரம் பருப்பு - ரெண்டு கைப்பிடி
  • பாசிப்பருப்பு - ரெண்டு கைபிடி
  • உளுந்து - ஒரு கைப்பிடி
  • உப்பு - அரை ஸ்பூன்
  • மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்
செய்முறை:-
  • அரிசி பருப்புகளை 15 நிமிடம் ஊறவைத்து ஆட்டுக்கல்லில் போட்டு உப்புடன் அரைத்து எடுத்து மிளகாய் பொடியை சேர்த்து நன்கு கலந்து தேவையானால் சிறிது நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்க வேண்டும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் மாவை ஊற்றி வட்டமாக இழுத்து எண்ணெய்யோ, நெய்யோ இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்றாக வெந்த உடன் திருப்பி போட்டு 2நிமிடத்தில் எடுக்க வேண்டும்.
  • அடை தோசை தயார்.

கார சட்னி:-

தேவையான பொருட்கள்
  • தேங்காய் - கால் மூடி
  • மிளகாய் வற்றல் - 5
  • பூண்டு - 2பல்
  • கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  • பொரிகடலை - ஒரு கைப்பிடி
  • உப்பு - சிறிது
செய்முறை:-
  • பொரிகடலை தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் நன்றாக வதக்கி எடுத்து உப்புடன் ஆட்டுக்கல்லில் போட்டு அரைத்து சிறிது அரைபட்ட உடன் பொரிகடலையை போட்டு வழு வழுப்பாக இல்லாமல் கொர கொரவென்று அரைத்து எடுத்து தேவையானால் சிறிது நீர் ஊற்றி கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து இறுதியில் கடுகு, உளுந்து தாளித்து கொட்ட வேண்டும்.
  • கார சட்னி ரெடி.
Read More...

தக்காளி தேங்காய் பால் குழம்பு

16 comments
தேவையான பொருட்கள்:-
  • தக்காளி - கால் கிலோ
  • பல்லாரி வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 5
  • தேங்காய் பால் - 1 கப்
  • கருவேப்பிலை - சிறிது
  • மிளகாய் பொடி - கால் ஸ்பூன்
  • சீரக பொடி - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • கடுகு , உளுந்து - 1 ஸ்பூன்
  • மல்லி செடி - சிறிது
செய்முறை:-
  • தக்காளியை கட் பண்ணி வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு,உளுந்து போட்டு வெடித்த உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கிய உடன் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
  • தக்காளி வதங்கிய உடன் மிளகாய் பொடி, சீரக பொடி, உப்பு போட்டு நன்றாக பிரட்டி விட வேண்டும்.
  • மிளகாய்பொடி சீரக பொடி வதங்கி கலர் மாறிய உடன் அரைத்தெடுத்த தேங்காய் பாலை ஊற்றி அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து கலக்கி விட்டு குழம்பு கொதித்த உடன் இறக்கி வைக்க வேண்டும்.
  • தக்காளி தேங்காய் பால் குழம்பு தயார்.
Read More...