Showing posts with label சிறு கதை. Show all posts
Showing posts with label சிறு கதை. Show all posts

கதை கேளு... கதை கேளு...

10 comments
ஒரு ஞானி தன் சீடருடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய போயிருந்தார். அவ ஊர் மக்கள் ஞானியை வரவேற்று நன்றாக உபசரித்தார்கள் . அவ் ஊரை விட்டு  வேறு ஊருக்கு செல்லும் போது ஞானி இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார்.மறுநாள் வேறு ஊருக்கு சீடருடன் சென்றார். அங்கு மக்கள் அவரை மதிக்கவில்லை. அவரின் உபதேசத்தை கேட்கவில்லை. அவ் ஊரை விட்டு சென்ற ஞானி இறைவனிடம் இவ் ஊர் மக்கள் அனைவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார்.  சீடர் ஒன்றும் புரியாமல் நம்மை மதித்து மரியாதை செய்த மக்களை பிரிய சொல்கிறீர்கள், நாகரீகம் தெரியாத இம் மக்களை அவர்கள்  பிரியாமல் இவ் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று தாங்கள் கூறும் காரணம்  எனக்கு விளங்க வில்லை என்று சீடர் கேட்டார். அதற்கு ஞானி நல்ல மனிதர்கள் நான்கு திசைகளில் பிரிந்து போனால் அவர்களிடம் பழகும்  தீய மனிதர்கள் நல்லவர்களாக மாறுவதற்கு வழி கிடைக்கும், ஆனால் ஒரே ஊரில் உள்ள தீய மனிதர்கள்  பிரிந்து போகாமல்  ஒரே இடத்தில் இருந்தால் அவர்களிடம் உள்ள தீய குணங்கள் மற்றவர்களிடம் பரவாமல் இருக்கும் . அதனால்தான் இவ்வாறு கூறினேன என்றார்.
                                                             இந்த கதையை படித்து விட்டு என் மகன் சின்னவர் என்னிடம் கேட்ட கேள்வி அம்மா...பூவோட சேர்ந்த நாறும் மணம் பெறும்.. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.. அதெப்பிடி இந்த கதையால இந்த பழமொழியோட லாஜிக் எங்கியோ உதைக்குதே..? ஏன் அந்த ஊரில் இருந்து பிரிந்து செல்லும் நல்லவர்கள்  கெட்டவர்களுடன் சேர்ந்து  கெட்டவர்களாக மாறிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? என்ற கேள்வியை என் முன் வைத்தார். எனக்கு பதில் தெரியல்லை... படிக்கிற நீங்க என்ன சொல்றீங்க...?
Read More...

சாது மிரண்டால்!!!

7 comments
சொர்ணம்மா காய்ந்த சருகாக கட்டிலில் இடுப்பு ஒடிந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக தனக்கு தானே எதுவும் செய்து கொள்ள முடியாத நிலையில் வேதனையில் முனங்கி கொண்டிருந்தாள். பேரில் உள்ள சொர்ணத்தை உடல் முழுதும் அணிந்து கொண்டு மனதை மட்டும் இரும்பாக வைத்து கொண்டு கணவன்,குழந்தைகள் ஏன் அந்த ஊரையே இள வயதில் ஆட்டி வைத்து ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி கொண்டிருந்தவள்.அவளின் கணவன் விட்டு சென்ற சொத்துகளை அனுபவித்து கொண்டு கடன்களை மகன் தலையில் கட்டி தனியாக கிராமத்திற்கு போய் விட்டாள். 6 மாதங்களுக்கு முன் கிராமத்தில் 80 வயதிலும் தன வேலைகளை தானே செய்து கொண்டு இருந்தவளுக்கு ஒரு மாலை பொழுது தலை சுற்றல் வந்து கீழே விழுந்தவள்தான்.. இடுப்பு எலும்பு முறிந்து அடுத்தவர் தயவில்லாமல் காலத்தை தள்ள முடியாமல் மகனின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். காலையில் எழுந்த உடன் காபி குடித்து அடுத்த கணமே வெற்றிலை போட்டு பழகி போன வாய் நம நமப்பு எடுக்க ஆரம்பித்தது. அவளின் மருமகள் பொன்னரசி தனியார் பள்ளியில் ஆசிரியையாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தாள். காலையில் 5 மணிக்கு எழுந்து பம்பரமாக சுழன்று அனைத்து வேலைகளையும் முடித்து சொர்ணம்மா கிழவிக்கு தேவையான உதவிகளை செய்து பணிக்கு செல்ல நேரம் சரியாக இருக்கும். மற்ற நேரங்களில் கிழவியின் தேவைகளை செய்ய அவளின் மகனும் பேரன்களும் இருந்தார்கள். காலை கடன்களை முடித்து காபி பருக மருமகளை அழைத்து பார்த்தாள். அன்று காலையில் இருந்தே தலைவலியுடன் பொன்னரசி அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள்.

கிழவியின் தேவைகள் அனைத்தையும் முதலில் தினமும் செய்துவிடும் பொன்னரசி அன்று தலைவலி காரணமாக கொஞ்சம் சுணங்கி போனாள். தினமும் பழகி போன வாய் நம நமப்பு எடுக்க வெற்றிலைகாக மருமகளை அழைத்தாள். அழைப்புக்கு மருமகள் வராததால் கிழவியின் ரத்தம் சூடேற வாயில் இருந்து அனலான வார்த்தைகள் மருமகளின் மேல் எரிமலையாக விழுந்தது.

தினமும் யந்திரமாக வாழ்க்கையை ஓட்டும் பொன்னரசி அன்று கோபத்தில் கணவனிடம் ஏங்க.. கல்யாணமான புதிதில் கடனை என்தலையில் கட்டி என் வாழ்க்கையே யந்திரத்தனமா போச்சு.. கடன் யாரால வந்தது.. உங்க அக்காகளுக்கு செஞ்சு செஞ்சுதானே.. நா இந்த வீட்டுக்கு வந்தப்ப உங்க அம்மா என்ன சொன்னாங்க....! ஞாபகம் இருக்கா.. சொத்து எதுவும் தராம, கடன் எதுவும் தராம இருந்திருந்தா கூட எனக்கு நிம்மதி இருந்திருக்கும்... சொத்தை முழுவதும் அவங்க பேரில் வைத்து வெறும் கடனை மட்டும் உங்களுக்கு கொடுத்து சொற்ப வருமானம் வர்ற தொழிலை செய்றதா.. கடனை கட்டுறதானு கேட்டப்ப உங்க வெகுளித்தனத்தால என்கிட்ட உங்கம்மா சொன்னது "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" அதெல்லாம் ரெண்டு வருஷத்தில நல்லா வந்திடுவான்..
அதெப்பிடி.. அதெப்பிடி... மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவானாம்... அப்போ இங்க எதுக்கு வந்து ஏ உசிர வாங்குறாங்க.. எனக்கு தண்ணிய ஊத்துற ஆண்டவன் அவங்களுக்கு ஊத்த மாட்டானா.. ஸ்டேட் பஸ்ட்டா வந்த என்பையன் படிக்க இவங்க கிட்ட பண வசதி கேட்டப்ப பேரன்னு பாக்காம அப்பவும் மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்கிட்டே என்ன வசதி இருக்குனு சொன்னவங்கதான இவங்க. சொந்த வீடு, சொத்துன்னு இருக்கிறவங்க என்கிட்டே என்ன இருக்குனு சொல்றப்ப... அது எதுவுமே இல்லாத என்கிட்டே என்ன வசதி இருக்குனு இங்க இருக்காங்க. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு நீங்களும் உங்க அம்மாகிட்ட சொல்லுங்க.. பாசம்,மனித நேயம் தெரியாத ஆளுங்களுக்கு என்னால எதுவும் பண்ண முடியாது. குறையில்லாம எவ்வளவு செய்தாலும் பாருங்க என்னமா.. சத்தம் போடுறாங்கன்னு.. நானும் மனுஷிதானே, தலைவலி, கால்வலின்னு எனக்கும் வராதா என்று படபடவென்று பட்டாசு மாதிரி பொரிந்து விட்டாள்.

ஏதோ மருமகள் திட்டுவது தெரிந்து பேரனிடம் உங்க அம்மா என்னடா சொல்றா.. என்று 10 வயது பேரனிடம் கேட்க அவன் ம்ம்ம்.. அம்மாக்கு தலை வலிக்குதாம்.. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு உங்ககிட்ட சொல்லணும் சொன்னாங்க. அப்பிடின்னா என்ன பாட்டி..? என்று கேட்க சொர்ணம்மா தேள் கொட்டிய திருடன் போல் முழித்தாள்.

மறுநாள் மகனை அழைத்து தன் பெயரில் உள்ள சொத்துக்களை மகனின் பெயருக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய கூறினாள். சிறு வயது முதல் தன் அம்மாவின் அதிகார தோரனையை பார்த்து பழகிய மாதவனுக்கு அப்பொழுது அவள் குரலில் அதிகாரம் இல்லாத ஆணவம் இல்லாத பேச்சை உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.
Read More...

தாழம் பூ

17 comments
       வீட்டின் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த பறவைகள் கத்திய ஒலியும், சேவலின் கொக்கரக்கோ கூவலும் கங்காவிற்கு காலை விடியலை உணர்த்தியது. படுக்கையில் இருந்து எழுந்தவள் இரண்டு நாட்களாக கண்ணம்மா வேலைக்கு வரவில்லை. இன்றாவது வருவாளா.. உடம்பு சரியாகி இருக்கும், வருவாள் என்று எண்ணிக் கொண்டே காலை கடன்களை முடித்தவள் மற்ற வேலைகளை செய்ய சுறு சுறுப்பாக ஆயத்தமானாள். காபி டிகாஷனை இறக்கி பால் சேர்த்து நுரை பொங்க ஆற்றிக் கொண்டே கணவனை எழுப்பினாள். அவளுடைய கணவன் சதாசிவம் காபியை குடித்து முடிக்கும் வரை அருகில் இருந்தவள் படுக்கை அறையை சுத்தம் செய்து கொண்டே மெல்ல கணவனிடம் ஏங்க... இந்த வாரம் நல்ல நாள் பார்த்து வளைகாப்பு செய்து நம்ம சுமதியை வீட்டுக்கு அழைத்து வரணும், இப்ப அவளுக்கு இது ஏழாவது மாதம் என்றாள். சதாசிவமும் சரி அழைத்து வருவோம் என்றார்.

       கிறீச்சென்று கேட் திறக்கும் சத்தம் கேட்டது. கண்ணம்மாதான் கேட்டை திறந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடா... வந்தாச்சா.. உடம்பு சுகமாயிருச்சா... நீயில்லாம வேலையே ஆக மாட்டேங்குது கண்ணம்மா.. இந்தா முதல்ல இந்த காபியை குடி, அடுத்து வேலையை பாக்கலாம் என்றாள். காலை டிபன் தயார் பண்ணி கொண்டிருந்த வேளையில் அம்மா.. நம்ம பாப்பாவை எப்ப கூப்பிட போறீங்க..? கல்யாணத்தப்ப பாத்தது நம்ம சுமதியம்மாவை..என்றாள். ஆமா.. கண்ணம்மா இந்த வாரம் வளைகாப்பு வச்சிருக்கு.. நீயும் கூட வா.. என்றாள். அம்மா நா ஒரு மனுஷின்னு என்னைப் போயி கூப்பிடறீங்க.. வெற்றிலை கரை படிந்த பல் தெரிய வெள்ளந்தி சிரிப்புடன் கேட்டாள் கண்ணம்மா.ஏன் கண்ணம்மா நீ வயசுல பெரிய மனுஷி.. சுமதிய தூக்கி வளர்த்தவ.. தொடர்ந்து ரெண்டு வருஷம் ஒரு வீட்ல வேலை பார்க்க முடியாம வேற வீட்டை பார்த்து போற இந்த காலத்தில நீ இந்த வீட்டுக்கு இருபது வருஷமா தினம் வந்து வேலை பாக்குறே... நீயும் இந்த வீட்டை சேர்ந்த ஒரு உறவுக்கார பெண்தான். அதனால இந்த வாரம் சுமதிய போய் பார்த்து வளைகாப்பு செய்து அழைத்து வருவோம் என்றாள். இதை கேட்டு சிரித்துக் கொண்டே சரிம்மா வர்றேன் என்று சொல்லி விட்டு வேலைகளை செய்ய துவங்கினாள்.

       வளைகாப்பிற்கு சுமதியை அழைக்கும் அன்று கண்ணம்மா கொப்புகொண்டை போட்டு கனகாம்பரம் சூடி கண்டாங்கி சேலையோடு வீட்டிற்கு வந்து மாங்கு மாங்கென்று சாதவகைகள் செய்து கங்காவிற்கு அனைத்து உதவிகளையும் செய்து அனைவரோடு சேர்ந்து ஊருக்கு கிளம்பினாள். மாப்பிள்ளை வீட்டில் கலகலப்பாக அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.சுமதிக்கு கண்ணம்மாவின் உடை, வெற்றிலை வாய் இவையெல்லாம் பிடிக்காமல் கங்காவின் காதோரம் மெல்ல கிசு கிசுப்பாக ஏம்மா.. இவளையெல்லாம் கூட்டிட்டு வந்தே.. மாமியார் வீட்டில் என் மானம் கப்பல் ஏறிடும் என்று கோபத்துடன் கேட்க முறைப்புடன் கங்கா மகளை சும்மா இருடி அவ உன் மேல எவ்வளவு அக்கறையா இருக்கா... அந்த பாசம் எனக்குத்தான் தெரியும், பேசாம வளையல் போட உட்காரு என்று கடிந்து சொல்ல மறு பேச்சு பேசாமல் முறைப்புடன் மனையில் உட்கார்ந்தாள். எல்லோரும் வளையல் போட்டு ஆசீர்வதிக்க கங்கா, கண்ணம்மாவை வா நீயும் வளையல் போட்டு விடு என்று கூற கண்ணம்மா வெற்றிலை சுண்ணாம்பு மணக்க ஒரு பாட்டை பாடி வளையல் போட்டு ஆசீர்வாதம் செய்தாள். சுமதி நெளிந்து கொண்டே வேண்டா வெறுப்போடு ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொண்டாள். அம்மாவின் வீட்டிற்கு வந்த பின் சுமதிக்கு கண்ணம்மா மேல் வெறுப்பு அதிகமாகியது. ஆனால் கண்ணம்மா தன் நிலையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் சுமதிக்கண்ணு நேரா படுக்காதே.. ஒரு பக்கமாவே படுத்து எந்திரி.. வயத்தை சொறியாதே.. உன் பிள்ளைக்கு தலை முடி நிறைய போல.. அரிக்கத்தான் செய்யும் அதனால தேங்காய் எண்ணெய் தடவி விடுறேன்.. கீழே உட்காராதே, சேர்ல உட்கார்ந்து எந்திரி கண்ணு.. என்று தினமும் அக்கறையாக சொல்வதை கடுப்புடன் அம்மாவிற்காக சகித்து கொண்டாள். நாட்கள் நகர்ந்து பிரசவ காலம் நெருங்க டாக்டர் பரிசோதித்து ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி அனுப்பினார்.

       மறுநாள் பக்கத்து ஊரில் உறவினர் யாரோ இறந்து விட கங்கா காலையில் அங்கு கிளம்பினாள் நாளை நான் வந்து விடுவேன், அதுவரை சுமதிக்கு துணையாக இரு.. அய்யாவும் சுமதிக்கு துணையாக வீட்டில் தான் இருப்பார் என்று கூறி கிளம்பினாள். அன்று மதிய உணவு முடித்து விட்டு சிறிது ஓய்வாக சுமதி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு வலி தோன்ற வலியை பொறுத்துக் கொண்டு அப்பாவிடம் கூற அவர் டாக்சியை கூட்டி வருகிறேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பதற்றத்துடன் திரும்பினார். யாரோ அரசியல் பிரமுகர் ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டார்களாம்.. அதனால் எந்த பேருந்தும் இயங்காதுன்னு சொல்கிறார்கள். உன் அம்மா ஊரில் இருந்து வருவது எப்படியோ... பஸ்,டாக்ஸி எல்லாமே ஸ்டிரைக் என்று பதறினார்.. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே சுமதிக்கு வலி அதிகமாகி துடிக்க ஆரம்பித்து விட்டாள்.

       கண்ணம்மா பிரசவம் பார்த்த அனுபவத்தில் சுமதிக்கு ஆதரவாக பேசி அவளின் வயிற்றை தொட்டு பார்த்தே பயப்படாதே கண்ணு.. சுகமா குழந்தை பிறந்திடும்,அஞ்சு நிமிஷத்தில வெண்ணெய், மிளகு, பனங்கல்கண்டு போட்டு கஷாயம் போட்டு தரேன்.. மடக்குனு குடிச்சிடு... என்று ஓடிப்போய் கஷாயம் போட்டு குடிக்க கொடுத்தாள். சுமதி மறுக்க அவளின் தந்தை சமாதானபடுத்தி குடிக்க செய்தார். அடுத்த பத்து நிமிடத்தில் வலி அதிகமாகி சுமதி அலற ஆரம்பிக்க சதாசிவத்திடம் அய்யா.. வண்டி ஏதும் கிடைக்கலியேன்னு கவலை படாதீங்க,சுமதிக்கண்ணுக்கு சுக பிரசவம் ஆயிடும்அய்யா... நான் பாத்துக்கிடுதேன். ஒன்னும் ஆகாது கொஞ்சம் வெளியே இருங்க.. என்று சொல்லிக்கொண்டே மருத்துவரை போல பிரசவம் பார்க்க ஆரம்பித்து விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சதாசிவம் சந்தோஷத்தோடும் அதே சமயம் சுமதிக்கு என்னவோ என்ற பயத்தோடும் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கண்ணம்மா குழந்தையை குளிப்பாட்டி தொப்புள் கொடி அறுத்து சுமதியின் அருகில் படுக்க போட்டு விட்டு வெளியே வந்து அய்யா.... உங்க பேரனை போய் பாருங்க செவேல்னு ராசா மாதிரி பிறந்திருக்கான் என்று கூறினாள். சிறிது நேரத்தில் ஒரு காட்டன் சேலையை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள் கண்ணு.. இந்த சேலையை இடுப்பில கட்டி விட்டா வயிறு எப்பவும் போல முந்தி இருந்த மாதிரி இருக்கும் என்று சொல்லிக் கொண்டே சுமதிக்கு உதவ சேலையை கழுத்தில் போட்டு கொண்டு கைத்தாங்கலாக சுமதியை தூக்கி விட்டாள்.

       சுமதியின் மனதில் கண்ணம்மாவின் கழுத்தை சுற்றி போட்ட சேலை ஸ்டெதஸ்கோப் போல் தெரிய அவளின் தூக்கி கட்டிய கொப்புக்கொண்டை ஒரு நர்ஸின் தலை தொப்பி போல் தெரிய ஒரு டாக்டரும் நர்ஸும் பக்கத்தில் இருக்கும் மன தைரியம் வர சுமதியின் மனதில் ஏனோ
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
என்ற குறளின் வரிகள் நினைவு வர கண்களில் கண்ணீர் வர விசும்பினாள். கண்ணம்மா பதறிப் போய் ஏங்கண்ணு... அம்மா பக்கத்துல இல்லாம போயிட்டாங்களேன்னு வருத்தப்படுறியா.. இந்த டிரைக் (ஸ்டிரைக்)கொஞ்ச நேரத்தில முடிஞ்சுடும்... பஸ்,கார் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடும்.. அம்மா இன்னிக்கி ராத்திரி வந்துருவாங்க.. என்று காரணம் புரியாமல் அவளை சமாதான படுத்தி அவளின் அடுத்த தேவைகளை செய்ய ஆயத்தமானாள்.
Read More...