தோழி ஷாதிகாவின் தொடர் பதிவை படித்து எனது கருத்தை பகிர்ந்ததில் ஸாதிகாவும் எனது கருத்தை படித்துவிட்டு என்னை இப்பதிவை எழுத தூண்டினார்.
என்னிடம் பொக்கிஷமாக பாதுகாக்க படும் பொருட்களில் இப்பொழுதும் உபயோகத்தில் இருப்பது இந்த சிணுக்கோலி.. செவ்வாய், வெள்ளிகளில் தலை குளித்து சிக்கு எடுப்பது இன்றும் இந்த சிணுக்கோலியால்தான். இதன் வயது 150க்கு மேல் இருக்கும். நான் 7 வயது சிறுமியாக இருந்த போது எனது தாத்தாவின் அம்மா இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் வயது 100 ஐ நெருங்கும் சமயம். அந்த பாட்டி இறந்தது எனக்கு லேசாக நினைவில் இருக்கின்றது. அந்த பாட்டி பயன்படுத்திய இந்த வெள்ளி சிணுக்கோலி 3 தலைமுறை கடந்து இப்பொழுது என்னிடம் உள்ளது.
சங்கு இதுவும் பாட்டி பயன்படுத்தியதுதான்.அன்று பாட்டி பூஜையில் வைத்து வணங்கிய சங்கு இன்று பாட்டியின் நினைவாக என் வீட்டு பூஜை அறையில் உள்ளது.
சின்ன டப்பா...இது என் அம்மாவின் அப்பா உபயோக படுத்தியது. இந்த டப்பா தாத்தாவின் ஞாபகமாக சும்மா வைத்துள்ளேன் . காரணம் இந்த டப்பா இந்திய சுதந்திரத்துக்கு முன் வெள்ளையன் ஆட்சியில் விற்பனைக்கு வந்த ஷேவிங் க்ரீம் டப்பா.. அந்த காலத்தில் க்ரீம்மாக இல்லாமல் கட்டி சோப்பாக வந்ததாம்.
இந்த தாத்தாவை பற்றி அக்கறை பச்சை பதிவில் எழுதியுள்ளேன்.
அழகிய கும்பா..இது அம்மாவின் அம்மா வழி வந்தது. அந்த பாட்டி இந்த கும்பாவை அம்மாவிற்கு கொடுக்க அம்மா அதை அழகுக்காக எதற்கும் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருந்தார்கள். இப்பொழுது நான் இதை ஷோகேஷில் அழகுக்காக வைத்துள்ளேன்.
போட்டோ.. சமீபத்தில் தான் என் மகன் இந்த போட்டோவை இரு தலைமுறைகள் உள்ள போட்டோ இது, எனக்கு வேண்டும் என்று அம்மா வீட்டில் இருந்து எடுத்து வந்தது. எனது அம்மா ,அப்பாவின் கல்யாண போட்டோ.
திருக்கை.. திருகைன்னும் சொல்லுவாங்க. வரும் தலைமுறையினருக்கு இதன் பயன் பாடே தெரியாமல் போகலாம். பல வருடங்களாக பயன் படுத்தாமல் இருந்த இதை அம்மாவிடம் இருந்து நான் வாங்கி பயன் படுத்தாமல் பழைய பொருட்களின் நினைவு சின்னமாக வைத்துள்ளேன்.












