அசத்தல் ஆடி..! அர்த்தமுள்ள ஆடி..!!

19 comments
       தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தான் கலைகட்டுற மாசம். இந்த மாதத்தை நினைத்தாலே
ஆடி பட்டம் தேடி விதை..
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்..
       இந்த பழமொழிதான் எல்லாருக்கும் நினைவிற்கு வரும். ஆடி முதல் தேதி பொதுவா தமிழ் நாட்டில் எல்லா கிராமங்களிலேயும் நகரங்களிலேயும் சைவ சாப்பாடு சாப்பிடுறவங்கள தவிர்த்து மற்ற எல்லோர் வீடுகளிலும் அன்னிக்கு அசைவ சமையலாதான் இருக்கும். இதுல நிறையபேர் தலை ஆடி கொண்டாடுரவங்களா இருப்பாங்க... அன்னிக்கு மாமிச விற்பனை அமோகமா இருக்கும். பத்தடிக்கு ஒரு கடையா புது கடைகள் போட்டிருப்பாங்க. (ஒரு நாள் கடை) அன்னிக்கு நானும் மட்டன் வாங்க வழக்கமா போற கடைக்கே போயிருந்தேன்.

       கடையில் சிறிது கூட்டம்தான்... பரவாயில்லை வெயிட் பண்ணுவோம்னு காத்திருந்தேன். ஒரு பெரியவர் திடீரென்று சப்தமாக யாரையோ பார்த்து என்னா...! மாப்ளே.. யாரோன்னு நினைச்சுட்டு இருக்கேன்... பேண்டு போடாம ஆள் அடையாளம் தெரியலையப்பா....! கைலியில இன்னைக்கு தானே பாக்கேன், என்னா... தலை ஆடியா..? என்று வெள்ளந்தியாக கிராமத்து பாஷையில் கேட்க , அந்த மாப்ளை பையன் யோவ்.. மாமா! பேண்டு போட்டா நாரும்மய்யா..பேச்சிலய கூட்டத்த நாரடிக்கிறே.. பேண்ட்னு சொல்லித்தொலை என்று நக்கலாக பேச,கூட்டத்தில் ஒரு பெண், கடைக்காரண்ணே நா போயி சமைக்கணும் எவ்ளோ நேரமா நிக்கிறேன்.. சீக்கிரம் 1கிலோ நிறுத்து போடுங்க.. என்று கூற, கடை காரர் ஏந் தாயி சித்த பொறு.. எல்லாரும் வீட்ல போயி சமைக்கத்தான் போறாங்க, என்று கல கலப்பா வியாபாரம் நடந்த கடையில் கூட்டம் களைந்து ரெண்டு கடை தள்ளி திருவிழா கூட்டம் அலை மோதியது. விசாரித்ததில் 1கிலோ கோழிக்கறி வாங்கினால் 2 முட்டை இலவசமாம்.(சீக்கு கோழி, கழிச்சல் கோழியா இருக்கும். இருந்தாலும் நம்ம ஆளுங்கதான் இலவசம்னு சொன்னாலே மாட்டு முத்திரத்தை கூட சுத்த இளநீர்னு ஒரு பிடி பிடிச்சுர மாட்டாங்களா...!)

       "தள்ளுபடி" "இலவசம் " இந்த ரெண்டு வார்த்தையை கேட்டாலே நம்ம மக்கள் புத்தியை எங்கேயோ அடமானம் வச்சுடறாங்க... குருவி சேர்த்த மாதிரி சேர்த்த பணத்தை வைத்தோ, இல்லை வீட்டுக்காரரிடம் சாமியாடி வாங்கிய பணத்தை வைத்தோ சம்பந்தப்பட்ட கடைக்கு போயி கூட்டத்தில இடி பட்டு 1000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 1500 ரூபாய்க்கு வாங்கி வந்து போன மாதம் வாங்கியிருந்தா 2000 ரூபாய், தள்ளுபடியில வாங்கினதால 500 ரூபாய் மிச்சம் பண்ணிட்டேன்னு பெருமையா சொல்வாங்க. ஆனா.. உண்மையில என்ன நடக்குதுன்னா "ஹோல் சேல்" நடத்துற எங்க குடும்ப நண்பர் ஒருத்தர் சொன்னது இது.
அண்ணாச்சி..ஆடிமாதம், மார்கழி மாதம் எல்லா தொழிலும் கொஞ்சம் சுணக்கமா இருக்கும்.புதுசா எதுவும் ஆரம்பிக்க மாட்டாங்க.பணப்புழக்கம் கம்மியா இருக்கும். எங்களுக்கு பொருளை எப்படியோ வித்து தள்ளணும்... அதனால மொத்தமா பொருளை வாங்கும் போது குறைந்தவிலைக்கு வாங்குவோம். விற்கும் போது இலாபத்தை சேர்த்துதான் விற்கிறோம். இந்த ஆடி மாதம் வர்றப்ப விற்பனை மந்தமா இருக்கும். அந்த நேரத்துல MRP rate ஐ விட சிறிது விலை அதிகமா வச்சி தள்ளுபடின்னு சொல்லி பழைய விலைக்கே இலாபம் பாத்து வித்துடுவோம்னு சொல்லி முடிச்சார்.
(நம்ம ஆளுங்க தான் ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலேயே புளியோதரை செஞ்சு நாலு நாள் சாப்டவங்கலாச்சே..! விக்காத சேலை,இத்து போன சேலை இதையெல்லாம் வித்து தள்ளுறதுக்கு யோசிக்காமயா இருப்பாங்க.)
      நம்ம பெரியவங்க ஆடியை ஒரு அர்த்தத்தோட தலை ஆடி ,நடு ஆடி, கடை ஆடின்னு புது மண தம்பதிகளை அழைத்து புது ஆடை எடுத்து கொடுத்து விருந்து வைத்து கொண்டாடி இருக்காங்க... இதனால உறவு முறை நெருக்கம் புது சம்பந்தங்களுக்கு அதிகமாகும். ஊர், ஊரா அம்மன் கோவில் திருவிழா கொண்டாடுறதுக்கு காரணம் ஆடி பட்டத்தில் தான் விவசாய வேலைகள் தொடங்குவாங்க. அப்ப அம்மன் கோவில்களில் கூழ் காய்ச்சி ஊத்தி தொடங்கிய விவசாயம் செழித்து வரணும்னு வேண்டுதல் வைப்பாங்க. கூழ் குடிக்கிறது ஆடிக்காற்றினால் வரும் நோய் தொற்று,அடுத்து வரும் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம்,சளி,இவற்றிற்கு நிவாரணமாக கேப்பை கூழ் செயல்படுவதால், உடற் சூட்டை அதிகப்படுத்துவதால், கூழ் காய்ச்சி ஊற்றும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க..

       பாரம்பரியமா அர்த்தத்தோட கொண்டாடிட்டு வர்ற இந்த ஆடி மாதத்தை வியாபாரிகள் ஆடி கொண்டாட்டம்,அசத்தல் ஆடி,ஆடித்தள்ளுபடின்னு பல மந்திர தந்திர வார்த்தைகளை அள்ளி வீசி மக்களை அசத்தி ஆடிமாத தள்ளுபடி வியாபாரத்தையும் அசத்திடராங்க...!

       சரி.. நீங்க கோழி எடுத்தீங்களான்னு கேட்காதீங்க. எப்பவும் வாங்கற கடையிலேயே 1கிலோ எடுத்து குழம்பும்,வறுவலும் செய்து சாப்பிட்டாச்சு. :)

19 comments:

  1. கோழி வாங்குனீங்க தானே..முட்டை ப்ரீயா கொடுத்தாங்களா..? இல்லே மட்டனுக்கு ஏதும் ப்ரீ இல்லையா..?

    ReplyDelete
  2. விற்காத சேலைக்கு தான் வருஷம் ஒரு பீதியை கிளப்பியராய்ங்களே..., இந்த வருசத்துல இந்த கலர் சேலை எடுத்து கூட பிறந்த தங்கச்சிகளுக்கு கொடுக்கணும்னு

    ஒரு வருசமாவது இந்த கலர் பேண்ட் எடுத்து கூட பிறந்த அண்ணன்களுக்கு கொடுக்கணும்னு பீதியை கிளப்பிவிடுவானுகளான்னு நானும் வருஷம் தவறாம பார்க்குறேன் ஒன்னும் நடக்குறமாதிரியில்லையே!

    ReplyDelete
  3. கோழிக்கு முட்டை இலவசமா.. நல்ல கண்டுபிடிப்பா இருக்கே ஹி ஹி ஹி!

    ReplyDelete
  4. அட ஆடி மாதம் என்றால் சவுலி கடை பாத்திரக்கடைகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் ... இப்பொழுது எல்லாம் கறிகடைகளிலும் கூட்டம் அதிகமாகிபோச்சா... அட பாவமே நம் மக்கள் இலவசம் என்றால் ஏமாந்து விடுவார்களே.... வியாபாரிகள் ஏமாற்ற கற்றவர்கள்... ஆனால் நம் மக்கள் ஏமாற தெரிந்தவங்க... அருமை அக்கா உங்கள் பதிவு...

    ReplyDelete
  5. கோவை தம்பி.. பதிவின் கடைசி பத்தி படிக்கலையா...?மட்டன் 1கிலோ எடுத்தால் 2 ஆட்டுக்கால் ப்ரீயாம்..:))

    ReplyDelete
  6. வரலாற்று சுவடுகள் தம்பி.. பார்த்திட்டே இருங்க, அட்சய திரிதியை அன்னிக்கு அக்கா,தங்கைகள் குறைந்தது 4கிராம் மோதிரமாவது வாங்கி அண்ணன்,தம்பிகளுக்கு போட்டாத்தான் வாழ்க்கையில வளமை தங்கும்னு ஒரு பீதியை கிளப்ப போறாங்க..:)

    ReplyDelete
  7. கிராமங்களில்தான் ஆடி ஒண்ணாம் தேதின்னா கண்டிப்பா அசைவம் எடுக்கனும்னு ஒரு கொள்கையை கடைபிடிக்கிறாங்க விஜிம்மா..ஏமாறுகிறவங்க ஏமாறிகிட்டே இருந்தா ஏமாற்றுகிறவர்கள் முளைத்து கொண்டே இருப்பார்கள் .

    ReplyDelete
  8. ஆடி என்று சொல்லி நம்ம பர்சை ஆட வைக்கிறாங்க இந்த வியாபார வில்லன்கள்...

    ReplyDelete
  9. கரெக்டா சொன்னீங்க சங்கவி.

    ReplyDelete
  10. ரொம்பவும் அழகாக, தேர்ந்த எழுத்தாளர் போல எழுதியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  11. ஆமாங்க எப்படி நாம சொன்னாலும் கேட்க மாட்டாங்க இந்த கடைக்காறங்க சொன்னா மட்டும் எப்புடி கேட்குறாங்க பயபுள்ளங்க மை வக்கிறாங்களோ?

    ReplyDelete
  12. நல்லாச் சொன்னீங்க சகோதரி ....!
    ஆனால் ஒரு விஷயம் : ஆடி மாதம் முக்கியமான பொருட்கள் எதுவும் வாங்காமல் இருப்பது நல்லது... எல்லாமே ஏமாற்றும் வேலை தான்.
    பகிர்வுக்கு நன்றி சகோ !

    ReplyDelete
  13. மனோ மேடம்..பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  14. ஆசை கண்ணை மறைத்து காசை கடை காரங்க கிட்ட விட்டுடறாங்க சசி. ஓவ்வொரு வருடமும் பள்ளத்தில் குதிக்க தயாரா இருக்காங்களே..

    ReplyDelete
  15. ஏமாற்று வேலைன்னு புரிய மாட்டேங்குதே..கருத்திற்கு நன்றி தனபாலன் சார்.:)

    ReplyDelete
  16. //சரி.. நீங்க கோழி எடுத்தீங்களான்னு கேட்காதீங்க. எப்பவும் வாங்கற கடையிலேயே 1கிலோ எடுத்து குழம்பும்,வறுவலும் செய்து சாப்பிட்டாச்சு. :)// இது தான் கடைசி பத்தி..இதுல ஆட்டு கால் ப்ரீ சொல்லவே இல்லை...ஒருவேளை காலை வறுவல் செய்து சாப்பிட்டீங்களா..?

    ReplyDelete
  17. நா கோழி வாங்கற கடை ரெம்ப ஹை ஜெனிக்..முதல் பத்தியில "வழக்கமா வாங்கற கடை" கடைசி பத்தியில " எப்பவும் வாங்கற கடை" இதை படிக்கலையா..தம்பி. கோழி கடையில போய் மட்டன் கேட்டா எப்பிடி...? அடைச்ச கடைய பாத்து உடச்ச சோடா கேட்ட மாதிரி இருக்கு.நீங்க அப்ப மட்டனுக்கு என்ன ஃ ப்ரீன்னு கேட்டதால, கால் ப்ரீன்னு கமண்டி இருக்கேன்..:)

    ReplyDelete
  18. ஆடி என்றாலே தள்ளுபடி என்பதை மனதில் விதைத்து விட்டார்கள்.அப்படியான விதைப்பில் இன்று வெற்றி பெற்று போய்க்கொண்டிருக்கிற வணிக உலகமும்,
    அது செய்கிற வித்தைக்கு நாம் ஆட்ப்பட்டுப் போவதும் ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை மறக்கடிக்க செய்து விட்டதுதான்.

    ReplyDelete
  19. கருத்திற்கு மிக்க நன்றி விமலன் சார் .

    ReplyDelete

Type in English (Press Ctrl+g to toggle between English and Tamil)