மயக்கும் மார்கழி

8 comments

மார்கழி மாதத்தை கடவுளை வழிபடும் மாதமாக அனைவரும் அதிகாலையில்  எழுந்து குளித்து கோவிலுக்கு செல்கின்றனர்.
முன்பனிக்காலம் மார்கழி தொடங்கி விட்டது. இதை உத்தராயண காலம் என்று சொல்வார்கள். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலம். தேவர்களின் விடிகாலை பொழுது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம், தேவர்களின் இரவு பொழுது..தை முதல் ஆனி வரை பகல் பொழுது. அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த வேளையாக கருத படுகிறது. எனவே இந்த மாதம் அனைவரும் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து வாசலில் கோலம் போட்டு வீட்டில் விளக்கேற்றி பின் அருகில் இருக்கும் கோவிலுக்கும் சென்று வருவர். அதனால் இந்த மாதம் சுறுசுறுப்பான மாதமாக காலை வேளையில் இருக்கும். பஜனை கோஷ்டியும், கோவில்களில் முழங்கும் பக்தி பாடல்களும் அனைவருக்கும் பக்தியையும் சுறுசுறுப்பையும் கொடுக்கும். அறிவியல் ரீதியாக  பார்க்கும் பொழுது அதிகாலை பொழுது கோவிலுக்கு செல்வோருக்கு அந்த வேளையில் ஓசோன் படலம் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அதிகமாக கிடைத்து ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் ஒரு காரணமாக உத்தராயண காலத்தை சொல்லலாம்.                                       இந்த சீசன்ல மணம் தரும் மலர்கள் கிடைப்பது மிக அரிது..அதனால அதிகாலை சுவாமி தரிசனத்திற்கு படத்தில் இருக்கும் இந்த மலர்களைதான் பூஜைக்கு கொடுக்க போகிறேன்..தோட்டத்தில் அதிகமாக இந்த மலர்கள் பூத்திருப்பதும் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக பறந்ததும் போட்டோ எடுத்தாச்சு..:) கேந்தி பூ என்று இங்க சொல்லுவாங்க..இந்த பூவிற்கு நீங்க என்ன பேர் சொல்வீங்க.
பூ பூவா பறந்து போகும் வண்ணத்து பூச்சியக்கா..நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா..
என்ன.. துருதுருன்னு பாக்குற..
தப்பிக்க எங்க வழி இருக்குனு பாக்குறேன்..நீ என்னடான்னா அக்கா..சொக்கா..னு பாடுறே. எனக்கு பயத்துல கக்கா..வருது.
Read More...

தேன்மிட்டாய்

30 comments
இட்லிக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும் போது புது உளுந்தம் பருப்பு என்று தெரிந்து ஒரு கைப்பிடி குறைவாக எடுத்து ஊற வைத்தேன். ஆனாலும் மாவு கிரைண்டரில் சுத்தும் போது மாவின் அளவு பொங்கி கிரைண்டர் விளிம்பில் வழியும் அளவு பொங்கி வந்தது. உளுந்து அளவு அதிகமாக இருந்தால் இட்லி நன்றாக வராது என்ற காரணத்தால் சிறிது மாவை தனியாக எடுத்து விட்டு இட்லிக்கு மாவு கலந்தேன்.அந்த சிறிது மாவில் என்ன செய்யலாம் என்று யோசித்த போது தோன்றிய ஐடியாதான் இந்த தேன்மிட்டாய்.
செய்து பார்த்தேன்... மிக நன்றாக வந்தது.
தேவையான பொருட்கள்:-
 • உளுந்து மாவு (கிரைண்டரில் அரைத்தது)                 - 2 கைபிடி
 • மைதா மாவு                   - 2 ஸ்பூன்
 • அரிசி மாவு                     - 2 ஸ்பூன்
 • ஜீனி                                 - 100 கிராம்
 • எண்ணெய்                    - தேவையான அளவு
செய்முறை:-
 • உளுந்து,மைதா,அரிசி மாவுகளை ஒன்றாக கலந்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் ஜீனியை கொட்டி அது முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கம்பி பதத்திற்கு பாகு வைக்க வேண்டும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் மாவு கலவையை சிறிது சிறிதாக ஊற்றி அது நன்றாக பொரிந்து வந்த உடன் எண்ணெய்யை வடித்து விட்டு ஜீனிப்பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தனியாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும்.
 • தேன் மிட்டாய் தயார்.
 • சீனிப்பாகு சூடாக இருக்கும் போதே எண்ணெய்யில் வடித்த உருண்டையை போட வேண்டும்.இவ்வாறு செய்தால் உருண்டை பாகை நன்றாக உள்வாங்கும்.
Read More...

சாது மிரண்டால்!!!

7 comments
சொர்ணம்மா காய்ந்த சருகாக கட்டிலில் இடுப்பு ஒடிந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக தனக்கு தானே எதுவும் செய்து கொள்ள முடியாத நிலையில் வேதனையில் முனங்கி கொண்டிருந்தாள். பேரில் உள்ள சொர்ணத்தை உடல் முழுதும் அணிந்து கொண்டு மனதை மட்டும் இரும்பாக வைத்து கொண்டு கணவன்,குழந்தைகள் ஏன் அந்த ஊரையே இள வயதில் ஆட்டி வைத்து ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி கொண்டிருந்தவள்.அவளின் கணவன் விட்டு சென்ற சொத்துகளை அனுபவித்து கொண்டு கடன்களை மகன் தலையில் கட்டி தனியாக கிராமத்திற்கு போய் விட்டாள். 6 மாதங்களுக்கு முன் கிராமத்தில் 80 வயதிலும் தன வேலைகளை தானே செய்து கொண்டு இருந்தவளுக்கு ஒரு மாலை பொழுது தலை சுற்றல் வந்து கீழே விழுந்தவள்தான்.. இடுப்பு எலும்பு முறிந்து அடுத்தவர் தயவில்லாமல் காலத்தை தள்ள முடியாமல் மகனின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். காலையில் எழுந்த உடன் காபி குடித்து அடுத்த கணமே வெற்றிலை போட்டு பழகி போன வாய் நம நமப்பு எடுக்க ஆரம்பித்தது. அவளின் மருமகள் பொன்னரசி தனியார் பள்ளியில் ஆசிரியையாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தாள். காலையில் 5 மணிக்கு எழுந்து பம்பரமாக சுழன்று அனைத்து வேலைகளையும் முடித்து சொர்ணம்மா கிழவிக்கு தேவையான உதவிகளை செய்து பணிக்கு செல்ல நேரம் சரியாக இருக்கும். மற்ற நேரங்களில் கிழவியின் தேவைகளை செய்ய அவளின் மகனும் பேரன்களும் இருந்தார்கள். காலை கடன்களை முடித்து காபி பருக மருமகளை அழைத்து பார்த்தாள். அன்று காலையில் இருந்தே தலைவலியுடன் பொன்னரசி அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள்.

கிழவியின் தேவைகள் அனைத்தையும் முதலில் தினமும் செய்துவிடும் பொன்னரசி அன்று தலைவலி காரணமாக கொஞ்சம் சுணங்கி போனாள். தினமும் பழகி போன வாய் நம நமப்பு எடுக்க வெற்றிலைகாக மருமகளை அழைத்தாள். அழைப்புக்கு மருமகள் வராததால் கிழவியின் ரத்தம் சூடேற வாயில் இருந்து அனலான வார்த்தைகள் மருமகளின் மேல் எரிமலையாக விழுந்தது.

தினமும் யந்திரமாக வாழ்க்கையை ஓட்டும் பொன்னரசி அன்று கோபத்தில் கணவனிடம் ஏங்க.. கல்யாணமான புதிதில் கடனை என்தலையில் கட்டி என் வாழ்க்கையே யந்திரத்தனமா போச்சு.. கடன் யாரால வந்தது.. உங்க அக்காகளுக்கு செஞ்சு செஞ்சுதானே.. நா இந்த வீட்டுக்கு வந்தப்ப உங்க அம்மா என்ன சொன்னாங்க....! ஞாபகம் இருக்கா.. சொத்து எதுவும் தராம, கடன் எதுவும் தராம இருந்திருந்தா கூட எனக்கு நிம்மதி இருந்திருக்கும்... சொத்தை முழுவதும் அவங்க பேரில் வைத்து வெறும் கடனை மட்டும் உங்களுக்கு கொடுத்து சொற்ப வருமானம் வர்ற தொழிலை செய்றதா.. கடனை கட்டுறதானு கேட்டப்ப உங்க வெகுளித்தனத்தால என்கிட்ட உங்கம்மா சொன்னது "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" அதெல்லாம் ரெண்டு வருஷத்தில நல்லா வந்திடுவான்..
அதெப்பிடி.. அதெப்பிடி... மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவானாம்... அப்போ இங்க எதுக்கு வந்து ஏ உசிர வாங்குறாங்க.. எனக்கு தண்ணிய ஊத்துற ஆண்டவன் அவங்களுக்கு ஊத்த மாட்டானா.. ஸ்டேட் பஸ்ட்டா வந்த என்பையன் படிக்க இவங்க கிட்ட பண வசதி கேட்டப்ப பேரன்னு பாக்காம அப்பவும் மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்கிட்டே என்ன வசதி இருக்குனு சொன்னவங்கதான இவங்க. சொந்த வீடு, சொத்துன்னு இருக்கிறவங்க என்கிட்டே என்ன இருக்குனு சொல்றப்ப... அது எதுவுமே இல்லாத என்கிட்டே என்ன வசதி இருக்குனு இங்க இருக்காங்க. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு நீங்களும் உங்க அம்மாகிட்ட சொல்லுங்க.. பாசம்,மனித நேயம் தெரியாத ஆளுங்களுக்கு என்னால எதுவும் பண்ண முடியாது. குறையில்லாம எவ்வளவு செய்தாலும் பாருங்க என்னமா.. சத்தம் போடுறாங்கன்னு.. நானும் மனுஷிதானே, தலைவலி, கால்வலின்னு எனக்கும் வராதா என்று படபடவென்று பட்டாசு மாதிரி பொரிந்து விட்டாள்.

ஏதோ மருமகள் திட்டுவது தெரிந்து பேரனிடம் உங்க அம்மா என்னடா சொல்றா.. என்று 10 வயது பேரனிடம் கேட்க அவன் ம்ம்ம்.. அம்மாக்கு தலை வலிக்குதாம்.. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு உங்ககிட்ட சொல்லணும் சொன்னாங்க. அப்பிடின்னா என்ன பாட்டி..? என்று கேட்க சொர்ணம்மா தேள் கொட்டிய திருடன் போல் முழித்தாள்.

மறுநாள் மகனை அழைத்து தன் பெயரில் உள்ள சொத்துக்களை மகனின் பெயருக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய கூறினாள். சிறு வயது முதல் தன் அம்மாவின் அதிகார தோரனையை பார்த்து பழகிய மாதவனுக்கு அப்பொழுது அவள் குரலில் அதிகாரம் இல்லாத ஆணவம் இல்லாத பேச்சை உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.
Read More...

கோலங்கள் 3

14 comments
கோல போட்டோ fileல போட்டு வைத்தது தேடினேன் போன பதிவுக்கு ஒரு சில போட்டோ கிடைக்கலை... இன்று பார்த்தேன்.. அதோட இந்த தீபாவளிக்கு போட்ட கோலத்தையும் பாருங்க. இந்த மயில் கோலம் போன வருட பொங்கலுக்கு போட்டது.. அடுத்தது தீபாவளிக்கு போட்ட கோலம்..தீபாவளிக்கு கோலம் போட்டீங்க..சரி என்ன ஸ்வீட் , காரம் பண்ணீங்கனு கேட்கறீங்களா.. அது அடுத்த பதிவுல போடுறேன்.
Read More...

சுருள் போளி

8 comments
தேவையான பொருட்கள் :-
 • மைதா மாவு                     - அரை கிலோ
 • சோடா உப்பு                      - சிறிது
 • உப்பு                                    - தேவையான அளவு
 • பொட்டுகடலை                - 200 கிராம்
 • சர்க்கரை                            - 200 கிராம்
 • வறுத்த வெள்ளை எள்   - 50 கிராம்
 • ஏலக்காய்                          - 4
செய்முறை :-
 • சிறிது நீரில் உப்பையும் சோடா உப்பையும் கலந்து மைதாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 • பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
 • மிக்சியில் பொட்டு கடலையை போட்டு மாவாக திரித்து வைக்க வேண்டும்.
 • பொட்டு கடலை மாவுடன் சர்க்கரை,வறுத்த எள்,பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் வட்டமாக தேய்த்த மாவை போட்டு பூரிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
 • பூரி சூடாக இருக்கும் போதே அதன் நடுவில் பொட்டுகடலை மாவு கலவையை பரவலாக  வைத்து சுருட்டி வைக்க வேண்டும்.
 • சுருள் போளி தயார்.
Read More...

வள்ளிக்கிழங்கு போண்டா

7 comments
தேவையான பொருட்கள்:-
 • வள்ளிக்கிழங்கு                          - அரைக்கிலோ
 • மைதா                                         - 100 கிராம்
 • அரிசி மாவு                                - 100 கிராம்
 • பூண்டு                                        - 2 பல்
 • சின்ன வெங்காயம்                 - 15
 • மிளகாய் பொடி                        - ஒரு ஸ்பூன்
 • உப்பு                                            - சிறிது
 • மிளகு பொடி                            - அரை ஸ்பூன்
செய்முறை:-
 • வல்லிகிழங்கை மண் போக கழுவி நன்றாக வேக வைத்து தோல் உரித்து தனியாக வைக்க வேண்டும்.
 • வெங்காயத்தை கட் பண்ணி பூண்டையும் பொடியாக நறுக்க வேண்டும்.
 • கிழங்கை நன்கு மசித்து அதனுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கி ரெடியாக வைக்க வேண்டும்.
 • மைதா, அரிசி மாவு, மிளகுபொடி, உப்பு  சேர்த்து நீரில் தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்க வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான எண்ணெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும்.
 • எண்ணெய் சூடான உடன் கிழங்கு உருண்டைகளை எடுத்து மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொன்னிற மானவுடன் எடுக்க வேண்டும்.
 • வள்ளிக்கிழங்கு போண்டா தயார்.
 • மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
Read More...

திரும்பிப்பார் பொரியல்

12 comments
தலைப்பே  வித்யாசமான பேரா இருக்குனு  நினைக்கிறீங்களா.. எங்க ஊர்ல இந்த பொரியலுக்கு  இதுதாங்க பேர்.:) நான் செய்த பொரியலில் இரண்டு காய்தான் சேர்த்துள்ளேன். ஆனால் இதனுடன் குடைமிளகாய், அல்லது  பீன்ஸ் சேர்த்து  செய்வார்கள். மூன்று காய் பேர் சேர்த்து சொன்னால் நீ....ளமா இருக்கும்னு  இப்பிடி ஒரு பேர் வச்சாங்களோ  என்னவோ.. இரண்டு, மூன்று காய்  இருப்பதால் கலர்புல்லா இருக்கும்.. என்ன என்ன காய்னு  யாரையும் பார்க்க வைப்பதனால்  இந்த பெயர் வந்திருக்கலாம். எதுக்கு இவ்வளவு பில்டப்னு நீங்க கேட்குறது  என் காதுல விழுது...ஏன்னா பதிவ  படிச்சிட்டு  அதென்ன  திரும்பி பார்..! அப்பிடின்னு  யாராச்சும் கேட்டீங்கன்னா .. :)
தேவையான பொருட்கள்:-
 • காரட்                               - 200 கிராம்
 • முட்டைகோஸ்            - 200 கிராம்
 • சின்ன வெங்காயம்     - 10
 • பச்சை மிளகாய்           - 4
 • தேங்காய்                      - சிறிது
 • கடுகு,உளுந்து             - 1 ஸ்பூன்
 • சீரகம்                            - 1 ஸ்பூன்
 • உப்பு                             - சிறிது
செய்முறை:-
 • காரட்டையும் முட்டைகோசையும் பொடியாக  துருவிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடான உடன் கடுகு, உளுந்து போட்டு வெடிக்க விட்டு வெட்டி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
 • வெங்காயம் வதங்கிய உடன் முட்டைகோஸை போட்டு வதக்க வேண்டும்.
 • முட்டைகோஸ் முக்கால் பாகம் வெந்த உடன் காரட்டை போட்டு வதக்க வேண்டும்.
 • இரண்டும் வதங்கிய உடன் மிக்சியில் அரைத்து வைத்த தேங்காய் , சீரக கலவையை போட்டு தேவையான உப்பையும் போட்டு நன்கு பிரட்டி விடவேண்டும்.
 • 2 நிமிடம் வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
 • திரும்பிப்பார்பொரியல் தயார்.
Read More...

அதளைக்காய் பொரியல்

11 comments
மழை காலத்தில சில காய்கள் அதிகமாக கடைகளில் விற்பனைக்கு வரும். அந்த நேரம் காயும் விலை குறைவாக கிடைக்கும். நம்மில் பலர் அது மாதிரி காய்களை விரும்பி வாங்க மாட்டார்கள். பாகற்காய் , அதளைக்காய் இவைகளை ஒதுக்க பட்ட காய்களாக பயன் படுத்துவதில்லை. ஆனால் அதில்தான் அதிக நன்மை தரும் மருத்துவ பயன்கள் உள்ளது. பல வீடுகளில் அதளைக்காய் வாங்கி சமையல் செய்வாங்க.. ஆனால் அந்த வீட்டில் அதை அனைவரும் சாப்பிடாமல் ஓரிருவர் தான் சாப்பிடுவார்கள். காரணம் அதன் கசப்புத்தன்மை... கசப்பு சுவை தெரியாமல் வெங்காயம் அதிகம் சேர்த்தால் சுவை நன்றாகவே இருக்கும்.அதளைக்காய் சிறந்த மலமிலக்கியாகவும் , வயிற்று புழுக்களை அழிக்கும் காரணியாகவும் செயல் படுகிறது. காயை பார்த்து இது என்ன காய்.. பேர் என்ன..?என்று கேட்கும் நபர்களும் இருக்கிறார்கள். ஏன்னா.. என்னிடம் இந்த கேள்வியை காய் வாங்கும் போது ஒரு நபர் கேட்டார். இது என்ன காலக்கொடுமை.. இந்த காலத்தில இப்பிடியுமா..? அதோட வெளிப்பாடுதாங்க இந்த பதிவு. :) ருசிக்கு சாப்பிடாதே .. பசிக்கு சாப்பிடு.. அப்பிடின்னு ஒரு பழ மொழி இருக்கு. ஆனா என்னை பொறுத்தவரை ருசிக்கோ, பசிக்கோ , ஆரோக்கியத்துக்காக சாப்பிடனும். என்ன நாஞ் சொல்றது சரிதானே.
தேவையான பொருட்கள்:-
 • அதளைக்காய்                       -    கால் கிலோ
 • பெரிய வெங்காயம்             -  ஒன்று
 • பச்சை மிளகாய்                    - 3
 • எண்ணெய்                             - ஒரு குழி கரண்டி
 • உப்பு                                        - சிறிது
 • கருவேப்பிலை                     - ஒரு ஆர்க்கு
செய்முறை:-
 • அதளைக்காயின் காம்பை நீக்கி சுத்தம் செய்து  தண்ணீரில் அலசி வைக்க வேண்டும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
 • அதனுடன் கீறிய பச்சை மிளகாய் , ஆய்ந்த கருவேப்பிலையை  சேர்த்து கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை  வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கடுகு உளுந்து  போட்டு வெடித் வெங்காயம் பச்சை மிளகாய் கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
 • வெங்காயம் வதங்கிய பின் அலசி வைத்த காயை போட்டு வதக்க வேண்டும்.
 • காய் சுருள வதங்கிய பின் உப்பை போட்டு நன்கு பிரட்டி இறக்கி விட வேண்டும்.
 • அசைவ விரும்பிகள்  இதனுடன் கருவாட்டை சேர்த்து வதக்கி செய்யலாம்.

Read More...

கிரிஸ்பி பொடடோ சாண்ட்விட்ச்

9 comments
தேவையான பொருட்கள் :-
 • உருளை கிழங்கு - இரண்டு
 • பிரட் - 12 ஸ்லைஸ்
 • பூண்டு - நான்கு
 • மல்லி தழை - சிறிது
 • மிளகு பொடி - சிறிது
 • உப்பு - அரை ஸ்பூன்
 • வெள்ளை எள் - ஒரு ஸ்பூன்
 • தக்காளி சாஸ் - சிறிது
செய்முறை :-
 • உருளை கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து அதனுடன் மிளகு பொடி, பொடியாக நறுக்கிய பூண்டு, மல்லி தழை,  உப்பு இவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.
 • பிரட்டை முக்கோணமாக வெட்டி ஒவ்வொரு ஸ்லைஸின் மீதும் சாஸை தடவி விட வேண்டும்.
 • அடுத்த லேயராக கிழங்கு கலவையை தடவி விட்டு அதன் மேல் வெள்ளை எள்ளை தூவி விட்டு மற்றொருமுக்கோண பிரட்டை அதன் மேல் வைத்து அனைத்து பிரட்டையும் ரெடியாக வைக்க வேண்டும்.
 • அடுப்பில் தவாவை வைத்து சிறிது வெண்ணை அல்லது நெய்யை தடவி தவா கொள்ளும் அளவு பிரட்டை வைத்து பொன்னிறமாக மாறிய உடன் திருப்பி போட்டு மறுபுறமும் பொன்னிறமான உடன் எடுத்து விட வேண்டும்.
 • காலை சிற்றுண்டியாக பரிமாறலாம்.
Read More...

கீரீன் குழம்பு

10 comments
தேவையான பொருட்கள் :-
 • தண்டு கீரை                          -  அரை கட்டு
 • சின்ன வெங்காயம்            -  10
 • தக்காளி                               - 2
 • கடலை பருப்பு                     -  அரை கப்
 • சோம்பு                                  - 1 ஸ்பூன்
 • உப்பு                                       - சிறிது
 • கரம் மசால் பொடி                       - 2 ஸ்பூன்
 • மிளகாய் பொடி                  - ஒரு ஸ்பூன் (காரத்திற்கு தேவையான அளவு )
 • பச்சை மிளகாய்                  - 2
  • அரைக்க :-
  • கீரை                                     - சிறிது
  • பூண்டு                                 - 4
  • இஞ்சி                                   - சிறிது
  • தேங்காய்                            - சிறிது
செய்முறை :-
 • கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக பிழிந்து மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
 • கீரையில் பாதியை பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து  நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.
 • மீதி கீரையை வதக்கி வைக்க வேண்டும்.
 • வாணலியை  அடுப்பில் வைத்து  தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பருப்புக்கலவையை சிறியதாக கிள்ளி போட்டு பொன்னிறம் வந்த உடன் எண்ணெய்  வடித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
 • மிக்சியில் தேங்காய், இஞ்சி, பூண்டு, சேர்த்து முதலில்  அரைத்து விட்டு அதன் பின் வதக்கிய தண்டு கீரையை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து  சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு  வெடித்த உடன் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி அதனுடன் கரம் மசாலா, மிளகாய் பொடி சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட  வேண்டும். 
 • கொதிக்கும்  கலவையில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது உப்பை சேர்த்து கலந்து கொதிக்கும் போது செய்து வைத்திருக்கும் பருப்பு உருண்டையை அதில் சேர்த்து உப்பு சரி பார்த்து இறக்கி விட வேண்டும்.
 • கீரீன் குழம்பு தயார்.
Read More...