வீட்டின் பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த பறவைகள் கத்திய ஒலியும், சேவலின் கொக்கரக்கோ கூவலும் கங்காவிற்கு காலை விடியலை உணர்த்தியது. படுக்கையில் இருந்து எழுந்தவள் இரண்டு நாட்களாக கண்ணம்மா வேலைக்கு வரவில்லை. இன்றாவது வருவாளா.. உடம்பு சரியாகி இருக்கும், வருவாள் என்று எண்ணிக் கொண்டே காலை கடன்களை முடித்தவள் மற்ற வேலைகளை செய்ய சுறு சுறுப்பாக ஆயத்தமானாள். காபி டிகாஷனை இறக்கி பால் சேர்த்து நுரை பொங்க ஆற்றிக் கொண்டே கணவனை எழுப்பினாள். அவளுடைய கணவன் சதாசிவம் காபியை குடித்து முடிக்கும் வரை அருகில் இருந்தவள் படுக்கை அறையை சுத்தம் செய்து கொண்டே மெல்ல கணவனிடம் ஏங்க... இந்த வாரம் நல்ல நாள் பார்த்து வளைகாப்பு செய்து நம்ம சுமதியை வீட்டுக்கு அழைத்து வரணும், இப்ப அவளுக்கு இது ஏழாவது மாதம் என்றாள். சதாசிவமும் சரி அழைத்து வருவோம் என்றார்.
கிறீச்சென்று கேட் திறக்கும் சத்தம் கேட்டது. கண்ணம்மாதான் கேட்டை திறந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடா... வந்தாச்சா.. உடம்பு சுகமாயிருச்சா... நீயில்லாம வேலையே ஆக மாட்டேங்குது கண்ணம்மா.. இந்தா முதல்ல இந்த காபியை குடி, அடுத்து வேலையை பாக்கலாம் என்றாள். காலை டிபன் தயார் பண்ணி கொண்டிருந்த வேளையில் அம்மா.. நம்ம பாப்பாவை எப்ப கூப்பிட போறீங்க..? கல்யாணத்தப்ப பாத்தது நம்ம சுமதியம்மாவை..என்றாள். ஆமா.. கண்ணம்மா இந்த வாரம் வளைகாப்பு வச்சிருக்கு.. நீயும் கூட வா.. என்றாள். அம்மா நா ஒரு மனுஷின்னு என்னைப் போயி கூப்பிடறீங்க.. வெற்றிலை கரை படிந்த பல் தெரிய வெள்ளந்தி சிரிப்புடன் கேட்டாள் கண்ணம்மா.ஏன் கண்ணம்மா நீ வயசுல பெரிய மனுஷி.. சுமதிய தூக்கி வளர்த்தவ.. தொடர்ந்து ரெண்டு வருஷம் ஒரு வீட்ல வேலை பார்க்க முடியாம வேற வீட்டை பார்த்து போற இந்த காலத்தில நீ இந்த வீட்டுக்கு இருபது வருஷமா தினம் வந்து வேலை பாக்குறே... நீயும் இந்த வீட்டை சேர்ந்த ஒரு உறவுக்கார பெண்தான். அதனால இந்த வாரம் சுமதிய போய் பார்த்து வளைகாப்பு செய்து அழைத்து வருவோம் என்றாள். இதை கேட்டு சிரித்துக் கொண்டே சரிம்மா வர்றேன் என்று சொல்லி விட்டு வேலைகளை செய்ய துவங்கினாள்.
வளைகாப்பிற்கு சுமதியை அழைக்கும் அன்று கண்ணம்மா கொப்புகொண்டை போட்டு கனகாம்பரம் சூடி கண்டாங்கி சேலையோடு வீட்டிற்கு வந்து மாங்கு மாங்கென்று சாதவகைகள் செய்து கங்காவிற்கு அனைத்து உதவிகளையும் செய்து அனைவரோடு சேர்ந்து ஊருக்கு கிளம்பினாள். மாப்பிள்ளை வீட்டில் கலகலப்பாக அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.சுமதிக்கு கண்ணம்மாவின் உடை, வெற்றிலை வாய் இவையெல்லாம் பிடிக்காமல் கங்காவின் காதோரம் மெல்ல கிசு கிசுப்பாக ஏம்மா.. இவளையெல்லாம் கூட்டிட்டு வந்தே.. மாமியார் வீட்டில் என் மானம் கப்பல் ஏறிடும் என்று கோபத்துடன் கேட்க முறைப்புடன் கங்கா மகளை சும்மா இருடி அவ உன் மேல எவ்வளவு அக்கறையா இருக்கா... அந்த பாசம் எனக்குத்தான் தெரியும், பேசாம வளையல் போட உட்காரு என்று கடிந்து சொல்ல மறு பேச்சு பேசாமல் முறைப்புடன் மனையில் உட்கார்ந்தாள். எல்லோரும் வளையல் போட்டு ஆசீர்வதிக்க கங்கா, கண்ணம்மாவை வா நீயும் வளையல் போட்டு விடு என்று கூற கண்ணம்மா வெற்றிலை சுண்ணாம்பு மணக்க ஒரு பாட்டை பாடி வளையல் போட்டு ஆசீர்வாதம் செய்தாள். சுமதி நெளிந்து கொண்டே வேண்டா வெறுப்போடு ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொண்டாள். அம்மாவின் வீட்டிற்கு வந்த பின் சுமதிக்கு கண்ணம்மா மேல் வெறுப்பு அதிகமாகியது. ஆனால் கண்ணம்மா தன் நிலையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் சுமதிக்கண்ணு நேரா படுக்காதே.. ஒரு பக்கமாவே படுத்து எந்திரி.. வயத்தை சொறியாதே.. உன் பிள்ளைக்கு தலை முடி நிறைய போல.. அரிக்கத்தான் செய்யும் அதனால தேங்காய் எண்ணெய் தடவி விடுறேன்.. கீழே உட்காராதே, சேர்ல உட்கார்ந்து எந்திரி கண்ணு.. என்று தினமும் அக்கறையாக சொல்வதை கடுப்புடன் அம்மாவிற்காக சகித்து கொண்டாள். நாட்கள் நகர்ந்து பிரசவ காலம் நெருங்க டாக்டர் பரிசோதித்து ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி அனுப்பினார்.
மறுநாள் பக்கத்து ஊரில் உறவினர் யாரோ இறந்து விட கங்கா காலையில் அங்கு கிளம்பினாள் நாளை நான் வந்து விடுவேன், அதுவரை சுமதிக்கு துணையாக இரு.. அய்யாவும் சுமதிக்கு துணையாக வீட்டில் தான் இருப்பார் என்று கூறி கிளம்பினாள். அன்று மதிய உணவு முடித்து விட்டு சிறிது ஓய்வாக சுமதி அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு வலி தோன்ற வலியை பொறுத்துக் கொண்டு அப்பாவிடம் கூற அவர் டாக்சியை கூட்டி வருகிறேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே கிளம்பிய ஐந்து நிமிடத்தில் பதற்றத்துடன் திரும்பினார். யாரோ அரசியல் பிரமுகர் ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டார்களாம்.. அதனால் எந்த பேருந்தும் இயங்காதுன்னு சொல்கிறார்கள். உன் அம்மா ஊரில் இருந்து வருவது எப்படியோ... பஸ்,டாக்ஸி எல்லாமே ஸ்டிரைக் என்று பதறினார்.. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே சுமதிக்கு வலி அதிகமாகி துடிக்க ஆரம்பித்து விட்டாள்.
கண்ணம்மா பிரசவம் பார்த்த அனுபவத்தில் சுமதிக்கு ஆதரவாக பேசி அவளின் வயிற்றை தொட்டு பார்த்தே பயப்படாதே கண்ணு.. சுகமா குழந்தை பிறந்திடும்,அஞ்சு நிமிஷத்தில வெண்ணெய், மிளகு, பனங்கல்கண்டு போட்டு கஷாயம் போட்டு தரேன்.. மடக்குனு குடிச்சிடு... என்று ஓடிப்போய் கஷாயம் போட்டு குடிக்க கொடுத்தாள். சுமதி மறுக்க அவளின் தந்தை சமாதானபடுத்தி குடிக்க செய்தார். அடுத்த பத்து நிமிடத்தில் வலி அதிகமாகி சுமதி அலற ஆரம்பிக்க சதாசிவத்திடம் அய்யா.. வண்டி ஏதும் கிடைக்கலியேன்னு கவலை படாதீங்க,சுமதிக்கண்ணுக்கு சுக பிரசவம் ஆயிடும்அய்யா... நான் பாத்துக்கிடுதேன். ஒன்னும் ஆகாது கொஞ்சம் வெளியே இருங்க.. என்று சொல்லிக்கொண்டே மருத்துவரை போல பிரசவம் பார்க்க ஆரம்பித்து விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சதாசிவம் சந்தோஷத்தோடும் அதே சமயம் சுமதிக்கு என்னவோ என்ற பயத்தோடும் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். கண்ணம்மா குழந்தையை குளிப்பாட்டி தொப்புள் கொடி அறுத்து சுமதியின் அருகில் படுக்க போட்டு விட்டு வெளியே வந்து அய்யா.... உங்க பேரனை போய் பாருங்க செவேல்னு ராசா மாதிரி பிறந்திருக்கான் என்று கூறினாள். சிறிது நேரத்தில் ஒரு காட்டன் சேலையை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள் கண்ணு.. இந்த சேலையை இடுப்பில கட்டி விட்டா வயிறு எப்பவும் போல முந்தி இருந்த மாதிரி இருக்கும் என்று சொல்லிக் கொண்டே சுமதிக்கு உதவ சேலையை கழுத்தில் போட்டு கொண்டு கைத்தாங்கலாக சுமதியை தூக்கி விட்டாள்.
சுமதியின் மனதில் கண்ணம்மாவின் கழுத்தை சுற்றி போட்ட சேலை ஸ்டெதஸ்கோப் போல் தெரிய அவளின் தூக்கி கட்டிய கொப்புக்கொண்டை ஒரு நர்ஸின் தலை தொப்பி போல் தெரிய ஒரு டாக்டரும் நர்ஸும் பக்கத்தில் இருக்கும் மன தைரியம் வர சுமதியின் மனதில் ஏனோ
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
என்ற குறளின் வரிகள் நினைவு வர கண்களில் கண்ணீர் வர விசும்பினாள். கண்ணம்மா பதறிப் போய் ஏங்கண்ணு... அம்மா பக்கத்துல இல்லாம போயிட்டாங்களேன்னு வருத்தப்படுறியா.. இந்த டிரைக் (ஸ்டிரைக்)கொஞ்ச நேரத்தில முடிஞ்சுடும்... பஸ்,கார் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடும்.. அம்மா இன்னிக்கி ராத்திரி வந்துருவாங்க.. என்று காரணம் புரியாமல் அவளை சமாதான படுத்தி அவளின் அடுத்த தேவைகளை செய்ய ஆயத்தமானாள்.
ஒரு குறலை வைத்து மெய் சிலிர்க்க வைக்கும் கதையை வடித்துவிட்டீர்கள் அக்கா!
ReplyDeleteமெய்யான அன்பே தெய்வீகம் என்பார் தலைவர் எம்.ஜி.ஆர், அந்த வகையில் கண்ணம்மா கடவுளே!
இரண்டு நாட்கள் வெளியூர் போனதால் தாமதம்..வருகைக்கு மிக்க நன்றி தம்பி..:)
Deleteஇந்த குறளின் மகத்துவத்தை பல பேர் கடைப் பிடித்தால் பல பிரச்சனைகள் (முதலில் வீட்டிலும், பிறகு வெளியிலும்) தீர்ந்து விடும்... சிறப்பான கதை...
ReplyDeleteதாழம்பூ தலையில் வைத்திருப்பவர்களை விட தூரத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் மனம் அதிகம் வீசும்.கண்ணம்மா தன் குடும்பத்தை விட கங்காவின் குடும்பத்திற்கு அதிக அக்கறை காட்டியது சுமதியின் ஆணவத்தை அடக்கியது.இது போல் அனைவரும் இருந்தால் தீமைகள் குறையும் சகோ.வருகைக்கு மிக்க நன்றி.
Delete//சுமதியின் மனதில் கண்ணம்மாவின் கழுத்தை சுற்றி போட்ட சேலை ஸ்டெதஸ்கோப் போல் தெரிய அவளின் தூக்கி கட்டிய கொப்புக்கொண்டை ஒரு நர்ஸின் தலை தொப்பி போல் தெரிய ஒரு டாக்டரும் நர்ஸும் பக்கத்தில் இருக்கும் மன தைரியம் வர//
ReplyDeleteஅருமை. அருமையோ அருமை. மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள், சகோதரி.
தொடர்ந்து இதுபோன்ற தரம் மிக்க படைப்புகளாகத் தர முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எழுத்துலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.;)))))
வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அண்ணா..:)
Deleteதாழம்பூவாய் மணக்கும் தங்கமான பதிவு.;)))))
ReplyDeleteஇதுபோன்ற தங்கமான கதாபாத்திரங்களை நானும் ஒரு சில கதைகளில் கையாண்டுள்ளேன். அவை என் நினைவுக்கு வந்தன. உதாரணமாக
முனியம்மா
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_7307.html
தைவெள்ளிக்கிழமை
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_11.html
ஜாதிப்பூ
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_12.html
தாயுமானவள்
http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html
அஞ்சலை
http://gopu1949.blogspot.in/2011/04/1-1-of-6.html
நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு கருத்து அளியுங்கள்.
அன்புடன்
VGK அண்ணா
ஊரில் இருந்து இன்றுதான் வந்தேன் அண்ணா ..அண்ணன் எழுதிய கதைகளை இன்று படித்து விடுவேன்..:)
Deleteசகோ அழகிய நடையில் அருமையான வரிகள் காட்சிகள் கண் முன் வந்து போகின்றன தொடருங்கள்.
ReplyDeleteஊக்கமான கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..:)
Deleteதாழம்பூவாய் மனக்கும் பாசமும் பந்தமும் !! அருமையான கதை .. பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி ராஜி மேடம்..:)
Deleteநல்ல பகிர்வு,,,
ReplyDeleteவருகைக்கும் மிக்க நன்றி சகோ..:)
Deleteதாழம்பூவாய் மண்க்கிறது கதை.
ReplyDeleteநிறைவில் கண்களில் நீரை துளிர்க்க வைத்து விட்டது.
வாழ்த்துக்கள்.
கண்ணம்மா என் காதலி ஆகி விட்டாள்.
தாழம்பூ மணக்கிறது. அருமையான கதை.
ReplyDeleteவலைச்சரம் வழி வந்தேன்.... நல்ல எழுத்து...
வாழ்த்துக்கள் அக்கா.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ராதா ராணி!
ReplyDeleteஉங்களது வெந்நீர் பற்றிய பதிவு படித்து ரசித்திருக்கிறேன்.
கண்ணம்மாவின் பாத்திரப் படைப்பு அருமை.
மனதுக்கு நிறைவான ஒரு கதை.
பாராட்டுக்கள்!